ரெயில் நிலையத்தில் என்ஜின் தடம் புரண்டது
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில், நள்ளிரவில் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில், நள்ளிரவில் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டார் ரெயில் நிலையம்
நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் மொத்தம் 3 பிளாட்பாரங்கள் உள்ளன. மேலும் கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோக சரக்கு ரெயில்கள் வந்து நிற்பதற்கு தனியாக தண்டவாள வசதி உள்ளது.
வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படும் உணவுப் பொருட்கள் இந்த தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு இறக்கப்படும். பின்னர் உணவுப் பொருட்கள் அங்கிருந்து லாரிகள் மூலமாக குடோன்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்த தண்டவாளத்தில் டீசல் ரெயில் என்ஜின் மட்டுமே இயக்க முடியும். மின்சார என்ஜின் இயக்க வசதி இல்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த தண்டவாளத்தில் இருந்து ஒரு ரெயில் என்ஜின் மட்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் இடத்திற்கு புறப்பட தயாரானது.
தடம் புரண்டது
அப்போது சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. உடனே டிரைவர் என்ஜினை இயக்க தொடங்கினார். ஆனால், ஒரு தண்டவாளத்தில் இருந்து இன்னொரு தண்டவாளத்திற்கு மாறி செல்வதற்காக கொடுக்கப்படும் இணைப்பு சரியாக பொருந்தாமல் இடைவெளி இருந்துள்ளது. இதனால், அந்த ரெயில் என்ஜின் திடீரென தடம் புரண்டது. என்ஜினின் 3 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி கீழே இறங்கின. உடனே, டிரைவர் என்ஜினை நிறுத்தினார்.
இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் மீட்பு ரெயில் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட என்ஜினை ஊழியர்கள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து ஊழியர்கள் தண்டவாளத்தில் சிறிது தூரம் சில நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர்.
ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் ெரயில் போக்குவரத்து எதுவும் பாதிக்கவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.