18 அடி உயர ஆஞ்சநேயருக்கு மீண்டும் வெள்ளி அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு

சுசீந்திரம் கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு மீண்டும் வெள்ளி அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-12-06 21:12 GMT
சுசீந்திரம்:
சுசீந்திரம் கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு மீண்டும் வெள்ளி அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆஞ்சநேயர் சாமி 
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த சாமியை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். 
ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாதம்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு முழு உருவ வெள்ளி அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடும், தீபாராதனையும் நடப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளால் வெள்ளி அங்கி அணிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
மீண்டும் வெள்ளி அங்கி 
இந்த நிலையில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து சுசீந்திரம் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாத்துதல்,, மாகாப்பு, சந்தன காப்பு மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் நேற்று மூலம் நட்சத்திரத்தை யொட்டி, சுமார் 1¾ ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஆஞ்சநேயர் சாமிக்கு முழு உருவ வெள்ளி அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. அதேநேரம் நேற்று சோமவாரம் என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்