சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.

Update: 2021-12-06 20:51 GMT
சிவகிரி,

சிவகிரி அருகே உள்ள காகம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லசிவம் (வயது 56). விவசாயி. நேற்று காலை 8 மணியளவில் வழக்கம்போல் வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு நல்லசிவம் மாடு மேய்க்க சென்றார். பின்னர் மாட்டை தோட்டத்தில் மேய்வதற்கு கட்டி விட்டு, அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார்.

பக்கெட்டை கயிற்றில் கட்டி தண்ணீர் இரைக்கும்போது அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் நல்லசிவம் கிணற்றுக்குள் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. 

இந்தநிலையில் காலை 11 மணி அளவில் கணவரை காணவில்லையே என்று அவருடைய மனைவி பூங்கொடி மகன் பொன்சங்கரை அழைத்து தோட்டத்துக்கு சென்று பார்த்து வரச்சொன்னார்.

தோட்டத்துக்கு சென்ற பொன்சங்கர் தந்தையை காணாததால் பொன்சங்கர் கிணற்று பக்கம் சென்று பார்த்துள்ளார். அங்கு தண்ணீர் இரைக்கும் கயிறு மேலே கிடந்ததால் சந்தேகம் அடைந்து பதறிப்போய் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தார்கள். அப்போது தண்ணீருக்குள் நல்லசிவத்தின் உடல் இருப்பது தெரிந்தது. உடனே உடலை மீட்டு மேலே கொண்டு வந்தார்கள். 

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நல்லசிவம் கிணற்றில் தவறிவிழும்போது கிணற்றுக்குள் மோட்டார் வைக்க பயன்படும் கம்பியின் மீது மோதியதாகவும், அதனால் அவர் படுகாயம் அடைந்து இறந்திருக்கலாம் என்றும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 




மேலும் செய்திகள்