தாளவாடி அருகே பரபரப்பு: கர்நாடக அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை
தாளவாடி அருகே கர்நாடக அரசு பஸ்சை யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாளவாடி
தாளவாடி அருகே கர்நாடக அரசு பஸ்சை யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெடுஞ்சாலையில் யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனச்சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போது வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி நெடுஞ்சாலையை கடக்கின்றன. மேலும் கரும்பு பாரம் ஏற்றி வரும் டிரைவர் யானைகளுக்கு கரும்பு கட்டுகளை போட்டு பழக்கப்படுத்தி விட்டதால், கரும்பு லாரிகளை எதிர்பார்த்து யானைகள் நெடுஞ்சாலைக்கு வந்து விடுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
பஸ்சை மறித்தது
குறிப்பாக தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர்கதையாகி உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை காராப்பள்ளம் வனச்சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலைக்கு ஒரு யானை வந்தது. அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக அரசு பஸ்சை யானை வழிமறித்தது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார்.
தானாக சென்றது...
பஸ்சின் முன்பக்க கண்ணாடி அருகே வந்த யானையை பார்த்து பயணிகள் பீதியடைந்தார்கள். சிலர் செல்போனில் படம் பிடித்தார்கள்.
அதேநேரம் யானை பஸ்சின் முன்னால் நின்றதால், நெடுஞ்சாலையின் இருபுறமும் எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு யானை தானாக அங்கிருந்து காட்டுக்குள் சென்றது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.