வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.

Update: 2021-12-06 19:38 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தியின் மகன் கலையரசன் (வயது 30). கூலி தொழிலாளியான இவர், தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த காசிநாதன் மகன் வினோத்துடன் (28) ஒரு மோட்டார் சைக்கிளில் ஒகளூர் கிராமத்தில் இருந்து வேப்பூரை நோக்கி வந்தனர். வேப்பூர் மகளிர் கலை கல்லூரி அருகில் வந்த போது எதிரில் வந்த சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கலையரசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். வினோத் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கலையரசனுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. அ.தி.மு.க. கிளைச் செயலாளர். இவரது மகன் தர்மராஜ் (34). லாரி டிரைவரான இவர் பெரம்பலூரில் இருந்து குன்னம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தர்மராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிற்காமல் சென்ற சரக்கு ஆட்டோவை செந்துறை ரவுண்டானா அருகே போலீசார் நிறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த டிரைவர் முருகானந்தத்தை(38) கைது செய்தனர்.

மேலும் செய்திகள்