தஞ்சையில், பரிதாப சம்பவம் மகனை கொன்று மனைவியுடன் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சையில், கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான தொழில் அதிபர் தனது மகனை கொன்று விட்டு மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் தேடிக்கொண்ட இந்த துயர முடிவை ‘வாட்ஸ்-அப்’ மூலம் தனது தம்பிக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
வல்லம்:-
தஞ்சையில், கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான தொழில் அதிபர் தனது மகனை கொன்று விட்டு மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் தேடிக்கொண்ட இந்த துயர முடிவை ‘வாட்ஸ்-அப்’ மூலம் தனது தம்பிக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தொழில் அதிபர்
தஞ்சையை அடுத்த ரெட்டிப்பாளையம் மனோ நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 38). இவருடைய மனைவி கனகதுர்க்கா(வயது 33). இவர்களுடைய ஒரே மகன் ஸ்ரீவத்சன்(11). இவன், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ராஜா, திருவையாறில் டீக்கடையும் நடத்தி வந்தார். இவர் தனது தொழில் நிமித்தமாக பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.
கடன் தொல்லையால் மனஉளைச்சல்
கடந்த சில மாதங்களாக ரியல் எஸ்டேட் தொழிலில் ராஜாவுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ராஜாவுக்கு கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வந்த ராஜா கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
ரியல் எஸ்டேட் தொழில் தனக்கு முன்புபோல் கைகொடுக்கவில்லை என்றும், தொழிலுக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், கடன் கொடுத்தவர்கள் தன்னிடம் பணம் கேட்டு நெருக்குவதாகவும் ராஜா தனது மனைவியிடம் கூறி மிகுந்த வேதனை அடைந்து வந்துள்ளார்.
தற்கொலை செய்ய முடிவு
இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் ராஜா வீட்டிற்கு வந்து உடனடியாக பணத்தை திருப்பி தர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர். ஒருபுறம் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் இல்லை. மறுபுறம் கடன் கொடுத்தவர்கள் தனக்கு கொடுத்த நெருக்கடியால் ராஜா செய்வதறியாது திகைத்து வந்துள்ளார்.
இதனால் வேறு வழி தெரியாத ராஜா தனது நிலையை மனைவியிடம் எடுத்து கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைப்பதை விட ஒரேயடியாக செத்து விடுவது என்று தற்கொைல செய்ய முடிவு செய்து தனது மனைவியிடம் இதுகுறித்து பேசியுள்ளார்.
மகனை கொன்று தற்கொலை
கணவரின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதை தவிர தனக்கு வேறு எதுவும் வழியில்லை என்று முடிவு செய்த ராஜாவின் மனைவி கனகதுர்க்காவும் கணவரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது நாம் இருவரும் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டால் தங்களது ஒரே மகன் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகிவிடுவானே என்று முடிவு செய்த அவர்கள் அவனையும் தாங்கள் செல்லும் இடத்துக்கு அழைத்துச்செல்வது என்று முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு ராஜா தனது மனதை கல்லாக்கிக்கொண்டு தனது ஒரே மகனை கழுத்தை நெரித்து கொன்று உள்ளார். பின்னர் ராஜாவும், அவரது மனைவி கனகதுர்க்காவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
‘வாட்ஸ்-அப்பில்’ தம்பிக்கு தகவல்
இந்த துயர முடிவை தேடிக்கொள்வதற்கு முன்பாக ராஜா இந்த தகவலை புதுக்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து அங்குள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வரும் தனது தம்பி தினேஷ் என்பவருக்கு செல்போனில் வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் பேசி அதனை ‘வாட்ஸ்-அப்’ மூலமாக அனுப்பி வைத்து உள்ளார்.
அதில் தனக்கு கடன் கொடுத்தவர்கள் தனக்கு அதிகம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், இதனால் தான் மன அமைதியில்லாமல் இருப்பதாகவும், வேறு வழியில்லாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பேசி அனுப்பி உள்ளார்.
அதிர்ச்சி அடைந்தார்
நள்ளிரவு இரண்டு மணி என்பதால் தூங்கிக்கொண்டிருந்த தினேஷ், வாட்ஸ்-அப்பில் தனக்கு வந்த வாய்ஸ் ரெக்கார்டு தகவலை கவனிக்கவில்லை. நேற்று காலை 7 மணிக்கு தினேஷ் எழுந்து தனது செல்போனை பார்த்தபோது அவருடைய செல்போனிற்கு ராஜா அனுப்பியிருந்த வாய்ஸ் ரெக்கார்டு தகவல் தெரிய வந்தது.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ராஜாவின் செல்போனுக்கு பல முறை தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரமாக ராஜாவுடைய செல்போனில் ரிங் அடித்து கொண்டே இருந்துள்ளது. அதனை யாரும் எடுத்து பேசவில்லை.
நீண்ட நேரமாக கதவை தட்டினார்
இதனையடுத்து தினேஷ் இது குறித்து தஞ்சை சீதா நகரில் வசித்து வரும் கனகதுர்க்காவின் சகோதரர் பிரசன்னா என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த அவர் உடனடியாக ரெட்டிப்பாளையம் மனோ நகரில் உள்ள ராஜா வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. அவர் நீண்ட ேநரமாக கதவை தட்டி பார்த்துள்ளார். முன்பக்க கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து பிரசன்னா வீட்டின் பின்பக்கமாக வந்து பார்த்தபோது பின்பக்க கதவு லேசாக திறந்து இருந்தது.
3 பேரும் பிணமாக கிடந்தனர்
உடனடியாக வீட்டிற்குள் பிரசன்னா சென்று பார்த்தபோது வீட்டினுடைய ஹால் பகுதியில் உள்ள உத்திரத்தில் ராஜா மற்றும் கனகதுர்க்கா இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதும், அவர்களுடைய மகன் ஸ்ரீவத்சன் படுக்கை அறையில் உள்ள மெத்தையில் கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜா, கனகதுர்க்கா, ஸ்ரீவத்சன் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை 3 பேரின் உடல்களும் ராஜாவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடிதங்கள் உள்ளதா?
மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாக ராஜா, கடிதங்கள் எதுவும் எழுதி வைத்து உள்ளாரா? என்று வீடு முழுவதும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கடிதங்கள் எதுவும் சிக்கவில்லை.
இதுகுறித்து ராஜாவின் தம்பி தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன் தொல்லையால் தங்களது ஒரே மகனை கொன்று விட்டு மனைவியுடன் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.