நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தவரால் பரபரப்பு

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-06 19:08 GMT
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்எண்ணெய் பாட்டில்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் பாலு (வயது 60). இவருக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும், தாலுகா அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீஹா, சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் மற்றும் போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை கைப்பற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமத்துவபுரம்

நெல்லை அருகே உள்ள குறிச்சிகுளம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், “குறிச்சிகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மக்கள் வீட்டுமனை இல்லாமல் வசித்து வருகிறார்கள். தெற்குப்பட்டி, களக்குடி, எட்டாங்குளம் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏற்றவாறு எங்கள் பகுதியில் உள்ள பஞ்சாயத்து நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டு சமத்துவபுரம் அமைத்து அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

பாளையங்கோட்டை கனக நாயனார் தெருவில் வீட்டுக்குள் கழிவு நீர் வரும் சூழ்நிலை உள்ளது. மேலும் எங்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் அதிக அளவில் உள்ளே வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே வீடுகளுக்குள் கழிவுநீர் புகாத வண்ணம் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பாதுகாப்பு வழங்க வேண்டும்

நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கோபாலசமுத்திரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அன்று முதல் எங்கள் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அந்த வழக்கை காரணம் காட்டி எங்கள் கிராமத்தில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கிராமத்தில் குடியேற விடாமல் தடுக்கின்றனர். எங்களது குடும்பம் வறுமையில் வாடுகிறது. எனவே இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மீண்டும் ஊருக்குள் குடியேறினால் மட்டுமே எங்கள் வாழ்வாதாரம் மேம்படும். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். முன்னதாக அவர்கள் தா்ணாவில் ஈடுபட்டனர்.
கே.டி.சி. நகர் வடக்கு பகுதி மக்கள், “தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும்” என்று கூறி மனு கொடுத்தனர்.

கல்குவாரி

வடக்கு விஜயநாராயணம் பகுதி மக்கள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜகோபால் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ராமகிருஷ்ணாபுரத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
இதேபோல் படப்பார்குளம் ஊர் மக்கள் தங்கள் ஊரில் உள்ள கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.வும், விவசாய சங்க தலைவருமான எஸ்.வி.கிருஷ்ணனை தரக்குறைவாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்