சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான 3 பேருக்கு காவல் நீட்டிப்பு
சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான 3 பேருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது
கீரனூர்
திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் கடந்த மாதம் 20-ந் தேதி இரவு ரோந்து பணியின்போது ஆடு திருடர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று பிடிக்க முயன்றபோது கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே தோகூரை சேர்ந்த மணிகண்டன் (வயது19) மற்றும் அவரது உறவினரான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது, 9 வயது சிறுவர்கள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கீரனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான மணிகண்டன் திருமயம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவர்கள் 2 பேரும் திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
இந்தநிலையில் கைதான 3 பேருக்கும் நேற்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது. இதையொட்டி மணிகண்டனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை கீரனூர் கோர்ட்டில் நீதிபதி பிச்சைராஜன் முன்பு ஆஜர்படுத்தினர். இதில் நீதிமன்ற காவலை வருகிற 20-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி பிச்சைராஜன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மணிகண்டனை மீண்டும் திருமயம் சிறையில் போலீசார் அடைத்தனர். இதேபோல கைதான 2 சிறுவர்களும் புதுக்கோட்டை இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் அவர்களுக்கும் வருகிற 20-ந் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவர்கள் மீண்டும் திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மீண்டும் 20-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.