மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்;
பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள பொன்-புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மாம்பழத்தான் ஊரணி கீழ்க்கரை 6-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் நடைபாதையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடிப்பதால் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே, இப்பகுதியில் உள்ள வடிகால் அமைப்பை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலரிடம் இதுதொடர்பாக மீண்டும் மனு கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.