கத்திமுனையில் 2 பெண்களிடம் 14 பவுன் சங்கிலி பறிப்பு

கத்திமுனையில் 2 பெண்களிடம் 14 பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2021-12-06 18:44 GMT
காட்பாடி

காட்பாடி கல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி (வயது 43). அதே பகுதியை சேர்ந்தவர் சாந்தா (55). இவர்கள் இருவரும் தங்களுடைய உறவினரின் சுப நிகழ்ச்சிக்கு நேற்று பகலில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்திசையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் நடந்து சென்ற பெண்களை மடக்கி தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைகாட்டி மிரட்டி இருவரும் அணிந்திருந்த 14 பவுன் சங்கிலியை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா திருடன், திருடன் என கத்தி கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வீச்சருவாளை தலைகீழாக திருப்பி பிடித்து சாந்தாவின் முதுகில் தாக்கியுள்ளனர். பின்னர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காட்பாடி போலீசார் வந்தனர். நகையை பறிகொடுத்த 2 பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் 2 பெண்ணிடமிருந்து 14 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவில்பதிவான காட்சிகளை பார்த்து போலீசார் விசாரணை நடத்தினர்.  பட்டப்பகலில் கத்தி முனையில் பெண்களிடம் நகையை பறித்த சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்