ஆற்காட்டில் தங்க நாணயம் தருவதாகக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஸ்டூடியோ உரிமையாளர் கைது
ஆற்காட்டில் தங்க நாணயம் தருவதாகக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஸ்டூடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
ஆற்காடு
ஆற்காட்டில் தங்க நாணயம் தருவதாகக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஸ்டூடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
தங்க நாணய திட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சடாய் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 37). ஆற்காடு பஜார் வீதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் தங்க நாணய திட்டம் என்ற ஒரு திட்டத்தை நடத்தி வந்துள்ளார். அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 30 வேலை நாட்களில் தலா ஒரு கிராம் வீதம் 30 தங்க நாணயங்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் முதலீடு செய்த அசல் பணம் நமக்கு திரும்ப கிடைத்துவிடும்.
5 மாதங்களில் 8 தங்க நாணயங்கள் வீதம் 40 தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும். மொத்தம் ஏழு மாதங்களில் இந்த திட்டம் முடிவடைந்து விடும். அதாவது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 30 தங்க நாணயமும், பரிசாக 10 தங்க நாணயம் என 40 தங்க நாணயம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பி ஆற்காடு அடுத்த தாஜ்புரா கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (60) கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுரேஷ்பாபுவிடம் தங்க நாணயம் திட்டத்தில் ரூ. 7 லட்சம் முதலீடு செய்துள்ளார். அதேபோல் அவருடைய நண்பர் செல்வம் ரூ.20 லட்சம் முதலீடு செய்துள்ளார். இதேபோல் பலரும் முதலீடு செய்துள்ளனர்.
ஸ்டூடியோ உரிமையாளர் கைது
இந்த நிலையில் சில நாட்கள் மட்டுமே தங்க நாணயம் வழங்கிய சுரேஷ்பாபு ஒரு மாதம் கழித்து அந்த திட்டத்தை திடீரென நிறுத்தி உள்ளார். இது குறித்து திருநாவுக்கரசு, அவரது நண்பர் செல்வம் மற்றும் பலர் சுரேஷ்பாபுவிடம் கேட்டபோது பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் பணம் தராமல் சுரேஷ்பாபு ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட திருநாவுக்கரசு, செல்வம் மற்றும் பலர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்க நாணய திட்டத்தின் மூலம் பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.