ஆசிரியர்கள் தளராமல் இருந்தால் மட்டுமே சமுதாயத்தை நன்கு கட்டமைக்க முடியும் சூப்பிரண்டு பேச்சு
ஆசிரியர்கள் தளராமல் இருந்தால் மட்டுமே சமுதாயத்தை நன்கு கட்டமைக்க முடியும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கூறினார்.
கரூர்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று ஒரு திருமண மண்டபத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் முன்னிலை வகித்தார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் வரவேற்றார். சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குஎதிரான குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
முன்னோடி
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கூறியதாவது:- குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தை காட்டிலும் அதிகமான நேரங்கள் இருக்கக்கூடிய இடம் கல்வி நிலையங்கள் தான். பெண்கள் சமுதாயத்தில் தங்களது பங்கினை செலுத்தியதால் பொருளாதாரத்திலும், கலாசாரத்திலும் அனைத்து விஷயங்களிலும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது.
தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக சட்டங்கள் இயற்றப்பட்டு கொண்டே வருகிறது.
ஆசிரியர்களின் பங்கு....
சட்டங்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், சட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையும் காவல்துறைக்கு மட்டுமானது அல்ல. காவல்துறை சட்டங்களை மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியவர்கள்.
தவறுகள் நடக்காமல் பார்ப்பது சமுதாயம்தான் செய்ய வேண்டும். எப்போதுமே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு என்பது அளவிடமுடியாதது.
நன்கு கட்டமைக்க முடியும்
கல்வி இல்லாமல் எந்தவொரு சொசைட்டியும் வளரமுடியாது. ஆசிரியர்கள் தளராமல் இருந்தால் மட்டுமே சமுதாயத்தை நன்கு கட்டமைக்க முடியும். மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை ஆசிரியர்கள் முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒரு மாணவன், மாணவி தவறு செய்தால் கூட அதற்கு நான்தான் பொறுப்பு என்று தாங்கள் பொறுப்பு எடுத்து கொள்ளவேண்டும். ஒரு தவறு செய்யக்கூடிய மாணவரோ, மாணவியோ மற்றவர்களையும் தவறான பாதைக்கு இழுத்து சென்றுவிடுவார்கள். அதனால் அவர்களையும் கண்காணித்து நல்வழி படுத்தவேண்டும், என்றார்.