போடிபட்டியில் பொதுப்பணித்துறையின் குளத்துக்கால்வாய் கரை உடைந்து விழுந்தது

போடிபட்டியில் பொதுப்பணித்துறையின் குளத்துக்கால்வாய் கரை உடைந்து விழுந்தது

Update: 2021-12-06 17:15 GMT
உடுமலை, 
உடுமலை அருகே போடிபட்டியில் பொதுப்பணித்துறையின் குளத்துக்கால்வாய் கரை உடைந்து விழுந்தது. அந்த பகுதியில் உள்ள சாலையும் சேதமடைந்ததால் போக்குவரத்து தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம்
 உடுமலை தளிசாலையில் இருந்து வாளவாடிக்கு பிரிந்துசெல்லும் சாலையில் உள்ள பெரியகுளம், மொத்த கொள்ளளவில் 90 சதவீதம் நிரம்பியுள்ள நிலையில் மேற்கொண்டு பெரியகுளத்திற்கு வருகிற தண்ணீர் பெரியகுளத்தில் இருந்து உபரி நீராக, இந்த குளத்தை அடுத்துள்ள ஒட்டுக்குளத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.    ஒட்டுக்குளத்திற்கு வரும் தண்ணீர் உபரிநீராக தங்கம்மாள் ஓடை மற்றும் ராஜவாய்க்கால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரிய குளத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பி.ஏ.பி.பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளத்துக்கால்வாய் மூலம் ஒட்டுக்குளத்தைச்சென்றடைகிறது.
குளத்துக்கால்வாய் உடைந்தது
பெரியகுளத்தில் இருந்து இந்த குளத்துகால்வாய் போடிபட்டி வழியாக ஒட்டுக்குளத்திற்கு வருகிறது. இந்த நிலையில் போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சூர்யா கார்டன் குடியிருப்பு பகுதிக்கு பின்புறபகுதியில் இந்த குளத்துக்கால்வாய்கரைப்பகுதி பல அடிகள் தூரத்திற்கு இடிந்து விழுந்துள்ளது. அதனால் சாலைப்பகுதிவரை சேதமடைந்துள்ளது. அத்துடன் அதற்கு அருகிலும் ஈரப்பதத்தால், குளத்துக்கரையை ஒட்டியுள்ள இடத்தில் சாலைப்பகுதி கீழே இறங்கி விரிசல் ஏற்பட்டுள்ளது.அந்த இடத்திலும் குளத்துக்கரைப்பகுதி இடிந்து விழும் நிலை உள்ளது.
போடிபட்டியில் உள்ள குடியிருப்புகளைச்சேர்ந்த பொதுமக்கள் இந்த குளத்துக்கால்வாய்கரையில் உள்ள சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் வாகனப்போக்குவரத்து அதிகம் இருக்கும். தற்போது இந்தகுளத்துக்கால்வாய்கரைப்பகுதி இடிந்து விழுந்துள்ள நிலையில், அதற்கு அருகிலும் சாலைப்பகுதி கீழே இறங்கியுள்ளதால் வாகனங்களில் செல்கிறவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தொடர்ந்து இந்த குளத்துக்கால்வாயில் அதிக அளவு தண்ணீர் விடப்பட்டால் கரைப்பகுதியும் அதையொட்டியுள்ள சாலையும் அதிக சேதமடைந்து இந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுமோ என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

மேலும் செய்திகள்