உப்பாறு ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்

உப்பாறு ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்;

Update: 2021-12-06 17:13 GMT
குடிமங்கலம், 
வல்லகுண்டாபுரம் அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உப்பாறு ஓடை
குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை.குடிமங்கலம் பகுதிகளில் தொடர் மழை காரணமாக உப்பாறு ஓடையில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. உப்பாறு ஓடையின் குறுக்கே வல்லகுண்டாபுரத்திலிருந்து மசக்கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் உப்பாறு ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. 
தற்போது குடிமங்கலம் பகுதியில் தொடர் மழை காரணமாக அதிக அளவு தண்ணீர் செல்கிறது. மேலும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரும் கலந்துள்ளதால் தரைமட்ட பாலங்களை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
உயர்மட்ட பாலம்
குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த பொருட்களையும், விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்களையும் கொண்டு செல்வதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தரைப்பாலம் அமைந்துள்ள பல பகுதிகளில் பாதுகாப்பு தடுப்பு சுவர் எதுவும் இல்லாத நிலை காணப்படுகிறது.
 இதனால் கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தரை பாலங்களை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே வல்லகுண்டாபுரம் அருகே உள்ள தரைமட்ட பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் செய்திகள்