நெகமத்தில் அரசு பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நெகமத்தில் அரசு பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்;

Update: 2021-12-06 17:12 GMT
நெகமம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் நெகமம் பேரூராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியையாக சைலஜா பிந்துவும், 4 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

 இந்த நிலையில் நேற்று காலை பள்ளி தொடங்கியது. சிறிது நேரத்தில் பொதுமக்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், பள்ளி படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை வாங்கி வருகின்றனர். 

பள்ளியின் கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. 

எனவே  பள்ளி மேலாண்மை குழுவை கலைத்துவிட்டு புதிய உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகர், நெகமம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சபரி கார்த்திகேயன், முன்னாள் துணைத்தலைவர் லட்சுமி நாச்சிமுத்து ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் சமரசம் அடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்