அரகண்டநல்லூர் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

அரகண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்கள் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

Update: 2021-12-06 17:11 GMT
திருக்கோவிலூர்

திடீர் ஆய்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திடீரென வருகை தந்தார். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்களிடம் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறதே என அமைச்சர் கேட்டார். அதற்கு அங்கிருந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இது போன்ற நிலைதான் இருக்கிறது என்றனர். 

மகளிர் உயர்நிலைப்பள்ளி

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் பார்வையிட்ட அவர், மழைநீர் ஒழுகும் பள்ளி கட்டிடங்களை உடனடியாக சீரமைக்கவும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் வரை இந்த பள்ளி வளாகத்திலேயே குறுக்கு சுவர் அமைத்து மகளிர் உயர்நிலைப் பள்ளியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

பின்னர் மாணவர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 
பள்ளி வளாகம் முழுவதும் தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியின் எளிமையான நடவடிக்கையை மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்