தேனி பூதிப்புரத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்
தேனி பூதிப்புரத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜபூபாலசமுத்திரம் கண்மாய் நிரம்பியது.
தேனி:
தேனி அருகே பூதிப்புரத்தில் ராஜபூபாலசமுத்திரம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் சுமார் 121 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பூதிப்புரம், மக்காமலை பகுதிகளில் உற்பத்தியாகும் வாழையாற்றில் இருந்து இந்த கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படும். கண்மாய் நிரம்பினால் மறுகால் பாய்ந்து கொட்டக்குடி ஆற்றில் சங்கமிக்கும். சரிவர மழை பெய்யாததால் இந்த கண்மாய் கடந்த 7 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்தது.
இந்தநிலையில் கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் மழையால் இந்த கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இந்த கண்மாய் நிரம்பும் முன்பே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை திறக்கச் சென்றனர். அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவில் பெய்த பலத்த மழையால் இந்த கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜபூபாலசமுத்திரம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மறுகால் வழியாக தண்ணீர் வெளியேறிய அழகை பொதுமக்கள் பலரும் பார்த்து ரசித்துச் சென்றனர். மறுகால் வழியாகவும் அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.