சாலையில் மரணக்குழி
கோவை புலியகுளம் பெரிய விநாயகர் கோவில் அருகில் உள்ள சாலையில் ஏற்கனவே குழி ஏற்பட்டு இருந்தது. அங்கு சிமெண்டு கலவை மூலம் சரிசெய்யப்பட்டது. ஆனால் மீண்டும் பெய்த கனமழை காரணமாக சிமெண்டு கலவை கரைந்து அங்கு மீண்டும் அதிகளவில் குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையில் உள்ள மரணக்குழியை சரிசெய்ய வேண்டும்.
பிரகாஷ், கோவை.
பயனில்லாத கழிவறை
ஊட்டி டவுன் பஸ்நிலையத்தில் தலைக்குந்தா செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே கழிவறை உள்ளது. இந்த கழிவறை கடந்த 3 மாதங்களாக மூடியே இருக்கிறது. இதனால் பஸ்நிலை யத்துக்கு வருபவர்கள் மற்றும் அந்தப்பகுதியில் கடை வைத்து இருப்பவர்கள், கழிவறை செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து யாருக்கும் பயனில்லாமல் மூடி இருக்கும் இந்த கழிவறையை திறக்க வேண்டும்.
ஆனந்த லட்சுமி, ஊட்டி.
பழுதடைந்த சாலை
கோத்தகிரி அருகே உள்ள வக்கனாமரம், பங்களாபடிகை, கொக்கோடு, சாமைகூடல் உள்ளிட்ட கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பங்கள் உள்ளன.. இந்த கிராமங் களுக்கு கரிக்கையூரில் இருந்து செல்லும் தார்ச்சாலை 3 கி.மீ. தூரம் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரிதும் அவதியடைந்து வருிகறார்கள். எனவே ஆதிவாசி மக்கள் நலன் கருதி சாலையை புதுப்பிக்க வேண்டும்.
காளன், சாமைக்கூடல்.
போக்குவரத்து நெரிசல்
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சர்வீஸ் சாலை உள்ளது. இங்குள்ள போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அனைத்தும் சாலையிலே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் அங்கு அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே இங்கு தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சுமணசாமி, கிணத்துக்கடவு.
சாலையில் உலாவரும் மாடுகள்
போத்தனூர் பகுதியில் சாலையில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூட்டங்கூட்டமாக சாலையில் உலா வரும் மாடுகள் திடீரென்று ஒன்றுக்கொன்று சண்டையிட்டு பாய்ந்து செல்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்.
காஜா உசேன், போத்தனூர்.
பராமரிப்பு இல்லாத மைதானம்
கோவை அவினாசி சாலை எல்.ஐ.சி. சிக்னல் அருகே வ.உ.சி. மைதானம் உள்ளது. இங்கு தினமும் பலர் நடைபயிற்சி மேற்கொள்வதுடன், விடுமுறை நாட்களில் இளைஞர்கள் விளையாடி வருகிறார்கள். ஆனால் இந்த மைதானம் போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அத்துடன் அந்த குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், அங்கு வந்து செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த மைதானத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
கொங்கு தேவராஜ், கோவை.
விபத்தை ஏற்படுத்தும் ரோடு
கோவை சாய்பாபா காலனி சிக்னலில் இருந்து காந்திபுரம் செல்லும் வழியில் ரெயில்வே பாலத்தின் அடியில் உள்ள சாலை மிகவும் சேதம் அடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
அப்பாஸ் அலி, கோவை.
பாம்புகள் நடமாட்டம்
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் இருந்து தனியார் கல்லூரிக்கு செல்லும் சாலையில் காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் பாம்புகள் அதிகமாக உள்ளது. அந்த பாம்புகள் அடிக்கடி சாலையில் வந்து செல்கிறது. இதனால் இந்த சாலையில் கல்லூரிக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபரீத சம்பவங்கள் ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாம்புகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
சக்ரவர்த்தி, ஜி.என்.மில்ஸ்.