தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
வடிகால் வசதி வேண்டும்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மேலவீதி, தெற்குவீதி மற்றும் கோடியக்கரை பகுதிகளில் வடிகால் வசதி இல்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆனந்த், வேதாரண்யம்.
குண்டும், குழியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த அத்திக்கடை கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குண்டும், குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-முகமது நசூர்தீன், கூத்தாநல்லூர்.
உயர்மின்விளக்குகள் ஒளிருமா?
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் கடை வீதியில் பொதுமக்கள் வசதிக்காக உயர்மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் கடைவீதி பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் கடைவீதிக்கு சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள உயர்மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், குத்தாலம்.