தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் நினைவு தினம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளரும், சமூகநலன் மற்றம் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.-காங்கிரஸ்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஏ.டி.பிரபாகரன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யு.சி மாநில அமைப்பு செயலாளருமான பெருமாள்சாமி தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிவ்ராஜ் மோகன் தலைமையில் ஓ.பி.சி. மாவட்ட தலைவர் கணேஷ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சாத்தான்குளம்-ஸ்ரீவைகுண்டம்
சாத்தான்குளம் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கல்யாண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, சட்டமன்ற அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வட்டார தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி-எட்டயுரம்
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி ஆத்தூர் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆத்தூர் நகர செயலாளர் முத்துகுமார், நகர இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மேலஆத்தூர் பஞ்சாயத்து பகுதியான நரசிங்கன்விளையிலும் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆறுமுகநேரி மெயின் பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் வெள்ளைத்துரை தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாடித்தோட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் பயனாளிகளுக்கு மானிய விலையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான செடிகள், விதைகள், ஊட்டச்சத்து ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாடித்தோட்டத்துக்கான செடிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 550 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 75 சதவீத மானிய விலையில் மாடித்தோட்ட செடிகள், காய்கறி விதைகள் மற்றும் ஊட்டச்சத்து தளைகள் ஆகிய திட்டங்கள் ரூ.11 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. மாடித் தோட்ட செடிகள் தொகுப்பில் காய்கறி வளர்ப்பு பைகள், தென்னை நார் கழிவு, காய்கறி விதைகள் மற்றும் உயிர் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. மேலும் 12 வகை காய்கறிகளை நமது வீட்டிலேயே உற்பத்தி செய்து வீட்டின் உணவு தேவைக்கு நமக்கு நாமே தன்னிறைவு பெறும் வண்ணம் காய்கறி விதைகள் வழங்கப்பட உள்ளன. கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்கள் மற்றும் இதர நோய்கள் நம்மை நெருங்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் திப்பிலி, கற்பூரவள்ளி, கற்றாழை போன்றவை அடங்கிய 8 வகை செடிகளின் தொகுப்பும் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்’ என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர்கள் சிவக்குமார், ஜெபத்துரை மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.