‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-06 15:17 GMT
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் 

உத்தமபாளையம் மெயின்ரோட்டில் குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக செல்கிறது. மேலும் அது குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். -பிருதிவிராஜா, உத்தமபாளையம்.

சேதம் அடைந்த பாலம்

சின்னமனூர் சாமிக்குளத்தில் இருந்து காலனி செல்லும் வழியில் பி.டி.ஆர். கால்வாயில் உள்ள பாலம் சேதம் அடைந்து விட்டது. இதனால் எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது. எனவே சேதம் அடைந்த பாலத்தை சரிசெய்ய வேண்டும். -மணிகண்டன், சின்னமனூர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் 

குஜிலியம்பாறை தாலுகாவில் ஒரு சில குளங்கள், ஆறுகள் ஆக்கிரமிப்புகளால் குறுகி விட்டது. இதனால் நல்ல மழை பெய்தும் போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. எனவே நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரைச்சாமி, குஜிலியம்பாறை.

ஆண்கள் கழிப்பறை திறக்கப்படுமா? 

போடி அருகே மேலசொக்கநாதபுரத்தில் சங்கரப்பன் கண்மாய்க்கு செல்லும் வழியில் புதிதாக ஆண்கள் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பறை கட்டி பல மாதங்கள் ஆகியும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -பிரகாஷ், மேலசொக்கநாதபுரம்.

குப்பை தொட்டியால் துர்நாற்றம்

ஆண்டிப்பட்டி தாலுகா மரிக்குண்டு ஊராட்சி எரதிமக்காள்பட்டியில் வீடுகளுக்கு அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் கொட்டப்படும் குப்பைகள், கழிவுகளால் வீடுகளில் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை தொட்டியை வேறு இடத்தில் மாற்றி வைக்க வேண்டும். -பிரசாந்த், எரதிமக்காள்பட்டி.

மழைநீர் வடிகால் வசதி 

சின்னமனூர் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சி எஸ்.அழகாபுரி கிராமத்தில் மழைநீர் வடிகால் வசதி முறையாக இல்லை. இதனால் மழைநீர் வெளியேறாமல் தெருவில் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் தெருக்கள் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் மக்கள் நடமாட முடியவில்லை. எனவே மழைநீர் வடிகால் வசதி செய்து தரவேண்டும். -சரவணபுதியவன், சின்னமனூர்.

மேலும் செய்திகள்