மண்வளத்தை பாதுகாக்க இயற்கை விவசாயம் அவசியம்

மண்வளத்தை பாதுகாக்க இயற்கை விவசாயம் அவசியம் என்று ஊட்டியில் நடந்த விழாவில் கலெக்டர் எஸ்.பி.அம்ரித் பேசினார்.;

Update: 2021-12-06 14:55 GMT
ஊட்டி

மண்வளத்தை பாதுகாக்க இயற்கை விவசாயம் அவசியம் என்று ஊட்டியில் நடந்த விழாவில் கலெக்டர் எஸ்.பி.அம்ரித் பேசினார்.

மண்வள தின விழா

தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஊட்டியில் உலக மண்வள தின விழா நடந்தது. இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விவசாயம் போல தற்போது நடைபெற்று வரும் விவசாயம் இல்லை. இதற்கு காரணம் மக்கள் தொகை பெருக்கம், கட்டிடங்களின் எண்ணிக்கை உயர்வு, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஆகியவை ஆகும். 

இதனால் குப்பைகள் நிறைந்து விவசாயம் மட்டுமின்றி மண் வளமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதை சரி செய்ய பல்வேறு தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகளும், வேளாண் அதிகாரிகளும் பரிந்துரைத்து வருகின்றனர். இவை ஏற்கனவே நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தவை. எனவே அதை பின்பற்றினால் மட்டுமே மண் வளத்தை பாதுகாக்க முடியும்.

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் செய்வதில் தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக நீலகிரி உள்ளது. இது தேசிய அளவிலாக மாற வேண்டியது அவசியம். இதற்கு அரசு முழு ஆதரவை அளிக்கும். 

அரசின் மானியங்கள் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மண்வளத்தை பாதுகாக்க இயற்கை விவசாயம் அவசியம். எதிர்கால தலைமுறையினரின் ஆரோக்கியத்துக்கு அதுவே உதவும். இவ்வாறு அவர் பேசினார். 

படிமட்ட முறை

பின்னர் இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணன் கூறும்போது, நீலகிரியில் காலநிலை மாறுபாடால் மழை பொழிவு குறநை்து வருகிறது. மழைநீரால் ஒரு ஹெக்டர் நிலத்தி்ல் ஆண்டுக்கு 40 டன்னுக்கு மேல் மண் அடித்து செல்லப்படுகிறது. இதற்கு விவசாயிகள் சரிவு படிமட்ட விவசாய முறையை தவிர்ப்பதுதான். 

அதை மேற்கொண்டு தேயிலை, நேப்பியர் புற்களை சாகுபடி செய்தால் மண் அரிப்பு தடுக்கப்படும் என்றார். விழாவில் இயற்கை உரங்கள், காய்கறிகள், மண் பரிசோதனை குறித்த விவரங்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. மேலும் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்