மழையால் தோன்றிய புதிய நீர்வீழ்ச்சிகள்
மழையால் தோன்றிய புதிய நீர்வீழ்ச்சிகள்
ஊட்டி
குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் நீர்வீழ்ச்சி போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வெறுமையாய் இருந்தது. வறண்டு காணப்பட்டதால் களை இழந்தது. கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. வழக்கத்தை விட அதிகமாக பெய்ததால் அணைகள், தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. வனப்பகுதிகளில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இதனால் மலைப்பாதைகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளது. குறிப்பாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் வருகை தரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு நீர்வீழ்ச்சிகள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
மலைப்பாதையில் நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் தண்ணீர் மேட்டுப்பாளையம் வழியாக சென்று பவானி அணையை அடைகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் லாஸ் பால்ஸ் பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மஞ்சூரில் இருந்து கோவை மாவட்டம் காரமடைக்கு செல்லும் மலைப்பாதையில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளது. இதனால் மலை மாவட்டமான நீலகிரியில் மேலும் இயற்கை அழகுக்கு பெருமை சேர்ப்பது போல் காட்சி அளிக்கிறது.