சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்

சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று நெல்லியாளம் கிராம மக்கள் ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Update: 2021-12-06 14:55 GMT
ஊட்டி

சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று நெல்லியாளம் கிராம மக்கள் ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகளை மனுவாக எழுதி அளித்தனர். நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டது. 

பந்தலூர் அருகே சேரங்கோடு பொதுமக்கள் கொடுத்த மனுவில், சேரங்கோடு ஊராட்சி நெல்லியாளம் நெம்பர்-2 கிராமத்தில் 1½ கிலோ மீட்டர் தூரம் சேறும், சகதியுமாக மண்பாதை காணப்படுகிறது. இதனால் அவசர காலங்களில் விரைவாக வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படுகிறோம்.

சாலை அமைக்க நடவடிக்கை

அங்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகள், பள்ளி குழந்தைகள் மிகவும் அவதி அடைகின்றனர். நோயாளிகளை பாடை கட்டிதான் கொண்டு சென்று செல்கிறோம். எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

ஊட்டி அருகே சின்ன குன்னூர் கிராம மக்கள் அளித்த மனுவில், சின்ன குன்னூரில் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள கோவில் திருவிழாக்களில் பங்கேற்று வந்தோம். கடந்த 2 ஆண்டுகளாக ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை விழாக்களில் பங்கேற்க கூடாது என்று கூறி தடுத்தனர். 

207 மனுக்கள்

இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சில அறிவுரைகளை வழங்கினார். இருப்பினும் மற்றொரு தரப்பினரை தீண்ட தகாதவர்கள்போல் ஒதுக்கி வைத்து உள்ளனர். அவர்களிடம் விழா நடத்த வரி வசூலிப்பதில்லை. அங்குள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனை அழைத்தல் என்ற சடங்கு காலம் காலமாக நடந்து வருகிறது. 

இந்த சடங்கை தொடர்ந்து நடத்த ஆவண செய்ய வேண்டும். வருகிற 13-ந் தேதி கும்பாபிஷேக விழாவுக்கு வரி தொகை பெற செய்யவும், விழாவில் பங்கேற்க செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 207 மனுக்கள் பெறப்பட்டது.

மேலும் செய்திகள்