தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு
தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருட்டு
தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனி அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் லாரி புக்கிங் அலுவலகங்கள், ஜெராக்ஸ் கடை, ஜவுளி ரெடிமேடு கடை உள்ளிட்டவை உள்ளன.
நேற்று முன்தினம் இரவு இங்கு வந்த மர்மநபர்கள், லாரி புக்கிங் அலுவலகம், ஜெராக்ஸ் கடை, ஜவுளி ரெடிமேடு கடை உள்ளிட்ட 4 கடைகளின் கதவை உடைத்து அங்கிருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று உள்ளனர். நேற்று காலையில் கடைகளை திறக்க வந்த அவற்றின் உரிமையாளர்கள், கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை
இதுகுறித்து சிப்காட் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் கடைகளின் கதவை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளில் மர்மநபர்கள் கொள்ளையடித்து இருப்பது, வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.