புளியந்தோப்பு பகுதியில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்க ரூ.7.10 கோடி: சென்னை மாநகராட்சி கமிஷனர்
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலை பகுதிகளிலும் மற்றும் பல்வேறு சிறு தெருக்களிலும் மழைநீர் தேங்கியது. இவற்றை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைநீர் தேங்காவண்ணம் நிரந்தர தீர்வாக புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்க அறிவுறுத்தினார்.
அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் அதிக கொள்ளளவு மழைநீரை வெளியேற்றும் திறனுடன் புதிய மழைநீர் வடிகால்கள் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வடிகால்கள் கான்கிரீட்டாலும், தூர்வாரும் போது சேதமடையாமல் இருக்க அதன் மேற்பரப்பில் திறக்கக்கூடிய வகையில் கான்கிரீட் பலகைகளை கொண்டும் அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலைகளில் அமைக்கப்பட உள்ள மழைநீர் வடிகால்கள் 3 அல்லது 4 இடங்களில் காந்தி கால்வாயில் சென்று கலக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் ரூ.7.10 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.