‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-06 10:40 GMT
அபாயம் நீங்கியது; மக்கள் நிம்மதி

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு டி-பிளாக் அருகில் உள்ள மின்கம்பத்தின் மேற்பகுதி மிகவும் ஆபத்தாக இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். சேதம் அடைந்த பகுதி வெல்டிங் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அபாயம் நீங்கியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.



சேதம் அடைந்த மின்கம்பம்

சென்னை கொரட்டூர் அன்புநகர் வாட்டர் கெனால் ரோட்டில் உள்ள மின்கம்பத்தின் மேற்பகுதி சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே இந்த மின்கம்பத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அன்புநகர் குடியிருப்போர் நல சங்கம்.

பயணிகள் கோரிக்கை

சென்னை பாரிமுனையில் இருந்து வெள்ளவேடு நோக்கி இயக்கப்படும் சாதாரண கட்டண பஸ்கள் (வழித்தட எண்: 54L, 54G) திருவள்ளூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும். இதன்மூலம் சென்னை-திருவள்ளூர் இடையே வேலை பார்க்க செல்லும் ஏராளமான கூலி தொழிலாளிகள் பயனடைவார்கள். ஏனெனில் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் டீலக்ஸ் பஸ்கள் ஆகும். இதில் கட்டணமும் அதிகமாக உள்ளதால் சற்று சிரமமாக இருக்கிறது.

- பயணிகள்.

மரண பள்ளங்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழி சாலைகளில் வண்டலூர், வாலாஜாபாத் சாலை முக்கியமான சாலை ஆகும். இந்த சாலையில் படப்பை, ஒரகடம், பண்ரூட்டி ஆகிய பகுதிகளில், வாகன ஓட்டிகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பள்ளங்கள் வருடக் கணக்கில் இருக்கிறது. மேலும் இந்த பள்ளத்தில் மழைநீரும் குளம் போன்று தேங்குகிறது. எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

- வாகன ஓட்டிகள்.



கழிவுநீர் கால்வாய் மோசம்

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் நாகர்ஜூன 2-வது தெருவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் முன்பாக சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடியின்றி ஆபத்தான வகையில் காட்சி தருகிறது. அதில் இருந்து கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருக்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- சாலமன், கோடம்பாக்கம்.

உயர்மட்ட பாலம் வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அடையாளச்சேரி கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான கீழ்மட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புத் தூண்கள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பழுதடைந்த இந்த குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு புதிய உயர்மட்ட பாலம் அமைத்து தந்தால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

- பொதுமக்கள்.

சாலையில் ஓடும் கழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் (ஒலிம்பியா அப்பார்ட்மெண்ட் அருகில்) கடந்த 10 நாட்களாக கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் அப்பகுதி துர்நாற்றம் சூழ்ந்து சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், பல்லாவரம்.



நிரந்தர சுடுகாடு தேவை

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கீரப்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் அங்காளம்மன் கோவில் தெரு மக்களுக்கு நிரந்தர சுடுகாடு இல்லை. இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்களை கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுடுகாட்டில் புதைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களுக்கு நிரந்தர சுடுகாடு மற்றும் இடுகாடு அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-அங்காளம்மன் கோவில் தெரு குடியிருப்போர் நல சங்கம், கீரப்பாக்கம்.

நாய்கள் தொல்லை

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி நகர், சிவா பிரியா நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை மிகுதியாகவே இருக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரவே சிறுவர்-சிறுமிகள் பயப்படுகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்திலேயே நடமாடி வருகிறார்கள். நாய்கள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- வி.சந்திரசேகர், கூடுவாஞ்சேரி.

கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை அடையாறு எல்.பி.சாலை கணபதி ராம் தியேட்டர் அருகே சாலையோரம் பல நாட்களாக கழிவுநீர் தேங்கியிருக்கிறது. இந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது பாதசாரிகள் மீது கழிவுநீர் படும் சூழல் உள்ளது. அதேவேளை வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருக்கிறது. இந்த கழிவுநீர் அகற்றப்படுமா?

- பொதுமக்கள், அடையாறு.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டும் நிலை இருக்கிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து சென்று உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

- வாகன ஓட்டிகள்.
 



மேலும் செய்திகள்