புதுச்சத்திரம் அருகே பயங்கரம்: கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
புதுச்சத்திரம் அருகே பயங்கரம்: கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை கணவருக்கு போலீஸ் வலைவீச்சு;
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கொடுவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காதல் திருமணம்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நவனி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 25). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் அருகே உள்ள முள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த நந்தினி (22) என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் வாலிபர் ஒருவருக்கும், நந்தினிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இது தமிழ்செல்வனுக்கு தெரியவந்தது. எனவே தமிழ்செல்வன் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் கள்ளக்காதலை கைவிட மறுத்த நந்தினி அடிக்கடி வாலிபருடன் செல்போனில் பேசி வந்து உள்ளார்.
இளம்பெண் வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று காலையில் தமிழ்செல்வன் பால் வாங்குவதற்காக வெளியே சென்று விட்டார். பின்னர் பால் வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது நந்தினி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தமிழ்செல்வன், செல்போனை வாங்கி நம்பரை பார்த்தார். அதில் நந்தினி கள்ளக்காதலனுடன் பேசியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு முற்றியதில் தமிழ்செல்வன், நந்தினியை வீட்டில் இருந்த கொடுவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கணவருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் நந்தினியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். மேலும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. பின்னர் நந்தினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தமிழ்செல்வனை வலைவீசி தேடி வருகின்றனர். தாயின் கள்ளக்காதல் மற்றும் தந்தையின் ஆத்திரம் ஆகியவற்றால் தற்போது 3 வயது ஆண் குழந்தை அனாதையான நிலை அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.