ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணிஇடை நீக்கம்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணிஇடை நீக்கம்

Update: 2021-12-06 05:27 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செலம்பகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). விவசாயி. இவர் மீது கடந்த ஆண்டு வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆள்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை அறிக்கையில் செல்வகுமார் உள்ளிட்ட 3 பேரின் பெயரை சேர்க்காமல் இருப்பதற்காக வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து செல்வகுமார், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் செல்வகுமார், ரூ.10 ஆயிரத்தை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சண்முகத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட காவல்துறைக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகத்தை பணிஇடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்