புளியங்குடியில் இறந்த தொழிலாளி செல்போனுக்கு தடுப்பூசி போட்டதாக வந்த சான்றிதழ் குடும்பத்தினர் அதிர்ச்சி
இறந்த தொழிலாளி செல்போனுக்கு தடுப்பூசி போட்டதாக வந்த சான்றிதழ்
புளியங்குடி:
புளியங்குடியில் 2 மாதங்களுக்கு முன்பு இறந்த தொழிலாளி செல்போனுக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கூலித்தொழிலாளி சாவு
தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடி செக்கடி தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 62).
கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி புளியங்குடியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மாரியப்பன் புளியங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் மாதம் 8-ந் தேதி இறந்தார்.
இதையடுத்து அவரது மகன் மாரிச்செல்வம் புளியங்குடி நகரசபை அலுவலகத்தில் தனது தந்தையின் இறப்பை பதிவு செய்து அதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார். 2-வது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பே மாரியப்பன் இறந்துவிட்டார்.
சான்றிதழ்
இந்த நிலையில் வீட்டில் உள்ள மாரியப்பனின் செல்போன் எண்ணிற்கு நேற்று முன்தினம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதை குடும்பத்தினர் எடுத்து பார்த்தனர். அதில் மாரியப்பன் கொரோனா தடுப்பூசி 2 தவணைகளும் செலுத்திக் கொண்டதாக குறுந்தகவல் மற்றும் சான்றிதழ் வந்துள்ளது.
இதைப்பார்த்த மாரியப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2 மாதங்களுக்கு முன்பு இறந்து போன தொழிலாளிக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வந்திருப்பது புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.