பாளையங்கோட்டையில் மாடு மிதித்து தூய்மை பணியாளர் சாவு உறவினர்கள் சாலை மறியலுக்கு முயற்சி

மாடு மிதித்து தூய்மை பணியாளர் சாவு

Update: 2021-12-05 21:47 GMT
நெல்லை:
பாளையங்கோட்டையில் மாடு மிதித்து தூய்மை பணியாளர் பலியானார். அவரது உறவினர்கள் சாலை மறியலுக்கு முயற்சி செய்தனர்.
தூய்மை பணியாளர்
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 37). இவர் நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சாவு
பாளையங்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து செல்லும் பணியில் மாரிமுத்து உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றிய போது ஒரு மாடு மாரிமுத்து மார்பு பகுதியில் மிதித்ததாக தெரிகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
மறியலுக்கு முயற்சி
இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் நேற்று அம்பேத்கர் நகர் மெயின் ரோட்டில் திரண்டனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட திருச்செந்தூர் ரோட்டுக்கு புறப்பட்டனர். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாரிமுத்து குடும்பத்தினர் சென்றனர்.
இதற்கிடையே தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மறியலுக்கு புறப்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
நிவாரணம் தேவை
அப்போது அவர்கள், மாரிமுத்து மாடு மிதித்ததால் உயிரிழந்து விட்டார். அனுபவம் இல்லாத இந்த பணியில் தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று வலியுறுத்தினர். மேலும் மாரிமுத்து மனைவிக்கு அரசு வேலையும், தமிழக அரசு சார்பில் குடும்பத்துக்கு நிவாரண உதவியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்