மல்லூர் அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-வியாபாரி உள்பட 2 பேர் கைது
மல்லூர் அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், வியாபாரி உள்பட 2 பேரை கைது செய்தனர்.
பனமரத்துப்பட்டி:
நாழிக்கல்பட்டி பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோன்களில் பதுக்கி வைத்து கடை, கடையாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் நாழிக்கல்பட்டி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஊதுபத்தி வியாபாரி மணிகண்டன் என்பவரின் குடோனில் சோதனை நடத்திய போது அங்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 200 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததும், அவர் ஊதுபத்திகளுடன் புகையிலை பொருட்களையும் சேர்த்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் மணிகண்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்த உமா ராம் (வயது 21) என்பவர் புகையிலை பொருட்களை மணிகண்டனுக்கு வினியோகம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மணிகண்டன், உமாராம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.