சந்தனமரம் கடத்தல் வழக்கில் மேலும் 5 பேர் பிடிபட்டனர்-ரூ.1.20 லட்சம் அபராதம் வசூல்
சந்தனமரம் கடத்தல் வழக்கில் மேலும் 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.20 லட்சம் அபராதம் வசூலிக்கப்ப்டடது.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி மைக்ரோ ஸ்டேஷன் பஸ் நிறுத்தம் அருகே, வாழப்பாடி போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.
இதில் கொல்லிமலை பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (வயது 22) என்பவர் பிடிபட்டார். 5 பேர் தப்பிச்சென்று தலைமறைவாகினர். பிடிபட்ட வாலிபர் கைப்பையில் மறைத்து வைத்திருந்த 1½ கிலோ எடை கொண்ட சந்தன மரக்கட்டைகள் மற்றும் தப்பிச்சென்றவர்கள் விட்டுச்சென்ற 2 மோட்டார் சைக்கிள்களையும் வாழப்பாடி வனத்துறையினர் கைப்பற்றினர்.
அதே நேரத்தில் வனச்சரகர் துரைமுருகன் தலைமையில், வனவர் ருக்மணி, சீனிவாசன், வனக்காப்பாளர் ஜெயக்குமார், சின்னதம்பி, சிவசக்தி ஆகியோர் கொண்ட தனிப்படையினர், தப்பிச்சென்ற 5 பேர் குறித்து விசாரித்தனர். இதில் அவர்கள், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற பழனிசாமி (23), சந்திரன் (24), பாஸ்கர் (37), சபாபதி (25), மோகன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.
சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற குற்றத்திற்காக, விஜயகாந்த் உள்பட 6 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை வனத்துறையினர் அபராதமாக வசூலித்தனர்.