ஒமைக்ரான் வைரஸ் பீதி எதிரொலி: கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பீதி எதிரொலியாக கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெங்களூருவில் ஒரே நாளில் 89 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

Update: 2021-12-05 21:01 GMT
பெங்களூரு:
 
ஒமைக்ரான் வைரஸ் பீதி

  நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் 2 பேருக்கு புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்ததை தொடர்ந்து, கொரோனா 3-வது அலை உருவாகும் பீதி உருவாகி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க அரசும், மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  ஆனாலும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால், கர்நாடகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை எப்போதும் போல நடைபெற்று கொண்டு இருந்தது. இதன் காரணமாக கொரோனா பீதி இல்லாததால், தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர்.

வீடு, வீடாக சென்று...

  குறிப்பாக முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான காலஅவகாசம் முடிந்த பின்பும், இன்னும் தடுப்பூசி போடாமல் இருந்து வருகிறார்கள். பெங்களூருவில் மட்டும் லட்சக்கணக்கானோர் 2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

  இந்த நிலையில், பெங்களூருவில் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்ததை தொடர்ந்து, கொரோனா பீதியில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை பெங்களூரு மட்டுமின்றி கர்நாடக மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அத்துடன் கொரோனா பரவலை தடுக்க அரசும், வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தடுப்பூசி போட ஆர்வம்

  இதன் காரணமாக மாநிலத்தின் மூளை முடுக்கிலும் உள்ள கிராமங்களுக்கு சென்று, அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வசதியாக நகரின் முக்கிய பகுதிகளில் தடுப்பூசி போடும் முகாம் அமைத்து, மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

  இதனால் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் விறு, விறுயென அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒமைக்ரான் பீதி ஒருபுறம் என்றாலும், கொரோனா பரவலை தடுக்க அரசும், ஒவ்வொரு மாநகராட்சியும், சுகாதாரத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஒரே நாளில் 89 ஆயிரம் பேர்

  அதன்படி, மாநிலத்தில் இதற்கு முன்பு தினமும் சராசரியாக 2 லட்சத்தில் இருந்து 2½ லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு வந்தனர். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் தினமும் சராசரியாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

  பெங்களூருவில் நேற்று முன்தினம் மட்டும் 89 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு இருந்தார்கள். அதே நேரத்தில் பெங்களூருவில் 2-வது டோஸ் தடுப்பூசி போடும் நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கர்நாடகத்தில் இதுவரை...

கர்நாடகத்தில் இதுவரை 7 கோடியே 69 லட்சத்து 82 ஆயிரத்து 186 பேர் ஒட்டு மொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். அவர்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 4 கோடியே 55 லட்சத்து 61 ஆயிரத்து 498 பேரும், 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 20 ஆயிரத்து 688 பேரும் உள்ளனர். 

அதாவது கர்நாடகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 93 சதவீதம் பேரும், 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 64 சதவீதம் பேரும் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7 நாட்களில் தடுப்பூசி போட்டவர்கள் விபரம்

நவம்பர் 28-ந் தேதி - 2,58,850

நவம்பர் 29-ந் தேதி - 5,68,075

நவம்பர் 30-ந் தேதி - 5,55,033

டிசம்பர் 1-ந் தேதி - 10,13,569

டிசம்பர் 2-ந் தேதி - 4,68,865

டிசம்பர் 3-ந் தேதி - 5,37,737

டிசம்பர் 4-ந் தேதி - 4,76,569
----

மேலும் செய்திகள்