சேலத்தில் தக்காளி விலை மீண்டும் உயர்வு-ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை

சேலத்தில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.;

Update: 2021-12-05 20:59 GMT
சேலம்:
சேலத்தில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு விலை குறைந்து கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சேலத்தில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கனமழை மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
அதன்பிறகு தக்காளி அதிகமாக வரத்தொடங்கியதால் கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மீண்டும் விலை உயர்வு
இந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி அதிகமாக வரத்து இருந்தாலும் தற்போது தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட உழவர் சந்தைகளில் நேற்று முதல் ரக தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டது. தக்காளி விலை மீண்டும் உயர்ந்ததால் சந்தைக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதேபோல் வெளி மார்க்கெட்டிலும், மளிகை கடைகளிலும் கிலோ ரூ.100 முதல் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சேலத்தில் சில மொத்த வியாபாரிகள் தக்காளியை பதுக்கி விற்பனை செய்யப்படுவதால் விலை உயர்வுக்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது. எனவே தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்