நம்பியூர் அருகே குட்டையில் மூழ்கிய மெக்கானிக் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
நம்பியூர் அருகே குட்டையில் மூழ்கிய மெக்கானிக் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
நம்பியூர்
நம்பியூர் அருகே குட்டையில் மூழ்கிய மெக்கானிக் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
மெக்கானிக்
நம்பியூர் அருகே உள்ள செல்லிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். அவருடைய மகன் சக்திவேல் (வயது 23). இவர் நம்பியூர் பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை வைத்து நடத்தி வந்தார். செல்லிபாளையம் பகுதியில் 30 அடி ஆழமுள்ள ஒரு குட்டை உள்ளது. இந்த குட்டை நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த பலத்த மழை காரணமாக முழுமையாக நிரம்பி உள்ளது.
குட்டையில் மூழ்கினார்
இந்த நிலையில் சக்திவேல் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்கள் சுதர்சன், பிரவீன்குமார், அருள்முருகன், பிரபு, சவுமியன் ஆகியோருடன் அந்த குட்டைக்கு சென்றுள்ளார். பின்னர் அனைவரும் குட்டையில் இறங்கி குளித்து கொண்டிருந்தார்கள். அப்போது குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு சக்திவேல் நீந்தி செல்ல முயன்றுள்ளார்.
இதில் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுபற்றி நம்பியூர் தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று குட்டையில் இறங்கி சக்திவேலை தேடி பார்த்தனர்.
கதி என்ன?
எனினும் சக்திவேலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கொடிவேரியில் இருந்து மீனவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குட்டையில் பரிசலில் சென்று சக்திவேலை தேடி பார்த்தனர். இரவு 7 மணி வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது.
குட்டையில் மூழ்கிய சக்திவேல் கதி என்ன? என்று தெரியவில்லை. இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக அவரை தேடும் பணி நடக்கிறது. இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.