திருடிய பணத்தில் மது குடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையர்கள்

திருவட்டாரில் திருட்டு வழக்கில் சிக்கிய 2 பேர் திருடிய பணத்தில் மதுகுடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

Update: 2021-12-05 20:36 GMT
திருவட்டார்:
திருவட்டாரில் திருட்டு வழக்கில் சிக்கிய 2 பேர், திருடிய பணத்தில் மதுகுடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. 
கடைகளில் திருட்டு
திருவட்டார் சந்தை அருகே சசி, பத்மராஜ், விஜயகுமார் ஆகிேயார் கடை நடத்தி வருகிறார்கள். சம்பவத்தன்று இவர்களின் கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. டீக்கடை உடைக்கப்பட்டு ரூ. 1,500 ஆகியவை திருட்டு போயிருந்தது. 
இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி குலசேகரம் அண்ணா நகரை சேர்ந்த எட்வின் என்ற செல்வன் (வயது50), கேசவன்புதூரை சேர்ந்த ஜெஸ்டின்ராஜ் (42) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் திருவட்டாரில் உள்ள 3 கடைகளில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், குலசேகரத்தில் உள்ள 4 கடைகளிலும், அஞ்சுகிராமம், மார்த்தாண்டத்தில் தலா ஒரு கடையிலும் திருடியது தெரிய வந்தது. 
வாக்குமூலம்
இதுகுறித்து எட்வின் போலீசில் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
நான் கூலி வேலை செய்து வந்தேன். இதில் போதிய வருமானம் இல்லாததால் மீன் வியாபாரம் செய்ய தொடங்கினேன். இந்தநிலையில் ஜெஸ்டின்ராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. எங்களுக்கு மது பழக்கமும், சீட்டாடும் பழக்கமும் உண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால் வருமானம் இன்றி தவித்தோம்.
இதனால் கடைகளை நோட்டமிட்டு பணம் திருட தொடங்கினோம். இவ்வாறு திருவட்டார், குலசேகரம், மார்த்தாண்டம், அஞ்சுகிராமம் பகுதிகளில் உள்ள பல கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடினோம். திருடிய பணத்தில் மது குடித்து உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டோம்.  சம்பவத்தன்று ஒரு செல்போனை விற்பதற்காக ஜெஸ்டின் ராஜின் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கைது செய்யப்பட்டோம்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இவர்கள் பெரும்பாலும் ஷட்டர் இல்லாத சிறிய கடைகளை குறிபார்த்து திருடியதாகவும், பூட்டுகளை உடைப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரும்பு கம்பி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்