பண்ணை உரிமையாளர் வீட்டில் 13 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை

பண்ணை உரிமையாளர் வீட்டில் 13 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது

Update: 2021-12-05 20:31 GMT
துறையூர் 
 துறையூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் சந்தோஷ் குமார்(வயது 30). இவர் பன்றி பண்ணை மற்றும் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ஆந்திராவில் உள்ள கோவிலுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இதனால், நேற்று முன்தினம் சந்தோஷ்குமார் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டில் தங்காமல் கறிக்கடையிலேயே தங்கி விட்டார்.
 இந்நிலையில் நேற்று அந்தப் பகுதியில் வழக்கமாக பால் ஊற்றும் பால்காரர் சந்தோஷ்குமாரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு சந்தோஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
பணம்-நகைகள் கொள்ளை
 தகவலின்பேரில், வீட்டுக்கு விரைந்து வந்த சந்தோஷ்குமார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதில் வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரொக்கம் மற்றும் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து துறையூர் போலீசாருக்கு சந்தோஷ்குமார் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு  சென்று விசாரணை நடத்தினர். மேலும், போலீஸ் மோப்ப நாய் ஸ்பார்க் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. ஆனால், மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்