தினத்தந்தி புகார் பெட்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-12-05 20:12 GMT
 நாய்கள் தொல்லை
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தெற்கு அலங்கம், போகி லட்சுமணன் நாயக்கன் சந்து, மாட்டு மேஸ்திரி சந்து பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்துவிடுகிறது. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை துரத்தி செல்கிறது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் கடைவீதிகளுக்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களில் வருபவர்களை விரட்டி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்ப்டடு வருகின்றன. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?   -விஜயலெட்சுமி, தஞ்சை.
ஆபத்தான மின்மாற்றி
 தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் பகுதி சிரமேல்குடி சாலை கோட்டைக்காடு மெயின் ரோட்டில் உள்ள மின்மாற்றி பழுதடைந்து ஆபத்தான நிலையில்உள்ளது. குறிப்பாக மின்மாற்றியை தாங்கி உள்ள மின்கம்ப தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக மின்மாற்றி உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.                         -குப்பன்னா, பட்டுக்கோட்டை.
 மின் விளக்குகள் ஒளிருமா?
 தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த செண்பகபுரம் அருகே தென்கொண்டார் இருப்பு கிராம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் வசதிக்காக மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.                                  -பொதுமக்கள், பாபநாசம்.
  தடுப்பூசி முகாம் வேண்டும்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த புள்ளபூதங்குடி கிராமத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புள்ளபூதங்குடி கிராமத்தில் உள்ள கால்நடைகள் கோமாரி நோய் மற்றும் மழைக்கால பருவ நோய்களின் தாக்கத்தினால் அதிகளவில் இறந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அமைத்து கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.  -மாரிமுத்து, பாபநாசம்.
 குப்பைத்தொட்டி வேண்டும்
 தஞ்சை டி.பி.எஸ் நகர் கிழக்கு வாரி பகுதியில் உள்ள அய்யனார் கோவில் முன்பு உள்ள சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பைகளில் இரை தேடி கால்நடைகள், நாய்கள், பன்றிகள் அதிகளவில் குவிந்து வருகிறது. இவை சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டி.பி.எஸ்.நகர் கிழக்குவாரி அய்யனார் கோவில் முன்பு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு, குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்