ஆடு திருடர்களை விரட்டி பிடித்த போது சப்-இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம்: கைதான வாலிபருக்கு நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்

ஆடு திருடர்களை விரட்டிப்பிடித்த போது சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான வாலிபருக்கு நீதிமன்ற காவல் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவுபெறுவதால் கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Update: 2021-12-05 17:24 GMT
கீரனூர்:
சப்-இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம்
திருச்சி நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் கடந்த மாதம் (நவம்பர்) 20-ந் தேதி இரவு ரோந்து பணியில் இருந்தார். அப்போது ஆடு திருடர்களை விரட்டி பிடித்ததில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர். 
இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே தோகூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 19), அவரது உறவினரான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது, 9 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கடந்த 21-ந் தேதி கைது செய்தனர். கைதானவர்களில் சிறுவர்கள் 2 பேரும் பள்ளி மாணவர்கள் ஆவார்கள்.
போலீஸ் காவலில் விசாரணை
இந்த நிலையில் கைதான மணிகண்டனை கீரனூர் கோர்ட்டு நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தி கடந்த 21-ந் தேதி இரவு திருமயம் சிறையில் அடைத்தனர். இதேபோல சிறுவர்கள் 2 பேரையும் இளைஞர் நீதிக்குழும நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சியில் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 
இந்த வழக்கில் கைதானவர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து சமீபத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். போலீஸ் காவல் முடிந்த பின் மீண்டும் அவர் திருமயம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று கோர்ட்டில் ஆஜர்
சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு நீதிமன்ற காவல் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனால் மணிகண்டனை இன்று கீரனூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். இதேபோல 2 சிறுவர்களும் இளைஞர் நீதி குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கைதானவர்களுக்கு நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை சம்பவத்தில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் இன்று போலீசார் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் வழக்கின் விசாரணை கோர்ட்டில் தொடங்கும்.

மேலும் செய்திகள்