வெள்ளத்தில் சிக்கி மாணவன் பலி

வெள்ளத்தில் சிக்கி மாணவன் பலி

Update: 2021-12-05 17:20 GMT
சிவகாசி, 
சிவகாசி அருகே தண்ணீரை வேடிக்கை பார்க்க சென்றபோது தரைப்பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததால் வெள்ளத்தில் சிக்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். 
பள்ளி மாணவன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஓடை தெருவை சேர்ந்தவர் ஹகீம்சாய்பு. இவருடைய மகன் ஷேக் அஸ்லாம்(வயது 14). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள ஆனைக்குட்டம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை வேடிக்கை பார்க்க ஷேக்அஸ்லாம் தனது நண்பர்கள் முகமது அஸ்லாம், ஷேக்முகமது ஆகியோருடன் நேற்று மதியம் 2 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வடமலாபுரம் பாலத்துக்கு சென்றனர்.. பின்னர் அங்கிருந்து தரைப்பாலம் வழியாக ஆனைக்குட்டம் அணைக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான் 
மோட்டார் சைக்கிள் தரைப்பாலத்தில் சென்றபோது அவர்கள் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அதில் ஷேக்அஸ்லாம் மட்டும் அருகில் இருந்த அர்ச்சுனா ஆற்றில் தவறி விழுந்தான். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து மாணவனை ேதடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.  உடனடியாக அவர்கள் இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் பாலமுருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
உடல் மீட்பு
3 மணி நேர தேடுதலுக்கு பின்னர் மாணவன் ேஷக்அஸ்லாம் உடல் பிணமாக மீட்கப்பட்டது. பின்னர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்