மாத்தூர் ராசிபுரத்தில் பெண் கவுன்சிலர் மீது பஸ் மோதல்; பொதுமக்கள் சாலை மறியல்
மாத்தூர் ராசிபுரத்தில் பெண் கவுன்சிலர் மீது பஸ் மோதி அவர் கீழே விழுந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆவூர்:
அரசு டவுன் பஸ்
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராசிபுரத்தில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளன. மேலும் ராசிபுரத்தையொட்டி பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளது. அங்குள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் பஸ் ஏறி இறங்குவதற்கு ராசிபுரத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாத்தூர் ரெயில்வே கேட்டிற்கு நடந்து சென்று வந்தனர்.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மாத்தூர்-ஆவூர் வழியாக மலம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சை முன்னாள் அமைச்சரும், தற்போதைய விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர். சி.விஜயபாஸ்கர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் ராசிபுரம் உள்ளே சென்று வருவதற்கு ஏற்பாடு செய்தார்.
கவுன்சிலர் மீது பஸ் மோதல்
இந்நிலையில் கடந்த 6 மாதமாக அந்த பஸ் ராசிபுரத்திற்குள் வராமல் மாத்தூர் ரெயில்வே கேட் வழியாக சென்று கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீண்டும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதையடுத்து மாத்தூர் ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனாலும் ராசிபுரத்திற்குள் நேற்று வரை பஸ் வரவில்லை.
இதனால் அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் தேவி பன்னீர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் நேற்று காலை மாத்தூர் ரெயில்வே கேட்டில் நின்று கொண்டு அவ்வழியே வந்த அரசு பஸ்சை ராசிபுரம் உள்ளே சென்று வருமாறு பஸ் டிரைவரிடம் கேட்டனர். அப்போது பஸ் டிரைவர் ராசிபுரத்திற்கு உள்ளே செல்ல முடியாது என்று கூறிக்கொண்டு பஸ்சை எடுக்க முயன்றுள்ளார். அப்போது கவுன்சிலர் தேவி பன்னீர் மீது பஸ் மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அங்கு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அரசு பஸ் ராசிபுரம் உள்ளே சென்று வருவதற்கு பஸ் டெப்போ மேலாளர் உத்தரவாதம் அளித்துள்ளதாக இன்ஸ்பெக்டர் கூறியதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மாத்தூர்-இலுப்பூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.