‘தினத்தந்தி’ புகார் பெட்டி
தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
சாலை வசதி தேவை
தேனி மாவட்டம் வருசநாட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்னால் உள்ள குடியிருப்பில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலத்தில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு தெரு சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் தெருவிளக்கு வசதியும் இல்லை. எனவே சாலை, தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும். -பாண்டீஸ்வரன், வருசநாடு.
மதுக்கடையால் மாணவிகள் அச்சம்
சின்னமனூர் மெயின்பஜார் வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்கின்றனர். ஆனால் இங்குள்ள அரசு மதுக்கடைக்கு வரும் சிலர், மதுவை வாங்கி விட்டு சாலையோரத்தில் அமர்ந்து குடிக்கின்றனர். மேலும் போதை தலைக்கேறியதும் சாலையில் செல்வோரிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் மாணவிகள் அச்சத்துடன் அந்த வழியாக செல்லும் நிலை உள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு கருதி மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். -மணிகண்டபிரபு, சின்னமனூர்.
வீடுகளை சூழ்ந்த மழைநீர்
ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் மெயின்ரோடு பகுதியில் அமைந்துள்ள விஜய விநாயகர்நகரில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. அதோடு கழிவுநீரும் சேர்ந்து விட்டதால் வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கமலக்கண்ணன், ஆத்தூர்.
சேதம் அடைந்த சாலை
ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதம் அடைந்து விட்டது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி விட்டதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஷேக்அப்துல்காதர், ஒட்டன்சத்திரம்.
பயணிகள் நிழற்குடை அவசியம்
உத்தமபாளையம் புறவழிச்சாலையில் பள்ளிவாசல் முன்பு இருந்த பயணிகள் நிழற்குடை சாலை அகலப்படுத்தும் போது அகற்றப்பட்டது. அதன்பின்னர் நிழற்குடையை அமைக்கவில்லை. இதனால் பெண்கள், மாணவிகள், முதியவர்கள் கொளுத்தும் வெயில், மழையில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். -பீர்இலாகி, உத்தமபாளையம்.
ஆழ்துளை கிணறால் விபத்து
நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள்நத்தம் ஊராட்சி குண்டலப்பட்டி வடக்குதெருவில் பயன்படாத ஆழ்துளை கிணறு கல் வைத்து மூடப்பட்டு இருக்கிறது. இரவில் அந்த வழியாக செல்லும் முதியவர்கள் பலர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். மேலும் சிறுவர்கள் அதிகம் நடமாடும் பகுதியாக இருப்பதால் விபத்து ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அழகுகுருவேல், குண்டலப்பட்டி.