ஆண்டிப்பட்டி பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரம்
ஆண்டிப்பட்டி பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள க.விலக்கு, அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், அம்மச்சியாபுரம், அய்யனார்புரம் உள்ளிட்ட கிராமங்கள் வைகை ஆற்றின் கரையில் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் ஒருபோகம் நெல் சாகுபடியும், இருபோகம் காய்கறி பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பெய்யும் காலங்களான நவம்பர், டிசம்பர் மாதங்களில் நெல் சாகுபடி நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு ஆண்டிப்பட்டி பகுதியில் பருவமழை வெளுத்து வாங்கியது. அதேபோல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இதனால் குளம், குட்டை, கிணறுகள் நிரம்பியுள்ளன. இதையொட்டி ஆண்டிப்பட்டி, குன்னூர், அம்மச்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இருப்பதால் நிலத்தை உழுது, நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு வருணபகவான் கருணையால் ஆறு, குளங்கள் நிரம்பி செழித்துள்ளது. மேலும் நெல் சாகுபடி பணியும் தீவிரமடைந்துள்ளது. நெல் விளைந்து அறுவடை செய்ய 70 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகும். தற்போது வைகை அணை மற்றும் முல்லைப்பெரியாறு அணைகளில் நீர்மட்டம் முழுவதுமாக உயர்ந்துள்ளதால் இந்த ஆண்டு இருபோக நெல் சாகுபடி செய்யும் வாய்ப்பு உள்ளது என்றனர்.