போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு; பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
பலத்த மழை எதிரொலியாக, போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடி:
பலத்த மழை எதிரொலியாக, போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடிமெட்டு மலைப்பாதை
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய 3 மலைப்பாதைகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து பலத்த மழை பெய்யும்போது, இந்த 3 மலைப்பாதைகளிலும் அவ்வப்போது மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு சாலையில் விழும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு பெய்த பலத்த மழையால் போடிமெட்டு மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்களும் சாலையில் விழுந்தன. இதனால் சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் மண்சரிவை சரிசெய்தனர். பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
மீண்டும் மண்சரிவு
இந்தநிலையில் போடிமெட்டு மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் போடிமெட்டு மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டது. மேலும் ஆங்காங்கே பாறைகள் உருண்டு மலைப்பாதையில் விழுந்தன. மரங்களும் சாய்ந்தன. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் மண்சரிவு மற்றும் பாறைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் கனரக வாகனங்கள் போடிமெட்டு மலைப்பாதையில் செல்ல தடை விதித்தனர். போடிமெட்டு மலைப்பாதையில் இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கினர்.
சீரமைப்பு பணி
இதற்கிடையே நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், பொக்லைன் எந்திரம் மூலம் மண்சரிவு மற்றும் பாறைகளை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இடையூறாக இருந்த பாறைகளை வெடி வைத்து தகர்த்தனர். பின்னர் அனைத்து வித வாகன போக்குவரத்திற்கும் அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.