தங்கம்மாள் ஓடை மற்றும் ராஜவாய்க்காலில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
தங்கம்மாள் ஓடை மற்றும் ராஜவாய்க்காலில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
உடுமலை,
உடுமலையில் உள்ள ஒட்டுக்குளத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தங்கம்மாள் ஓடை மற்றும் ராஜவாய்க்காலில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒட்டுக்குளம்
உடுமலையில் இருந்து திருமூர்த்தி அணை வரை உள்ள பகுதியில் ஏழுகுளம் பாசனம் பகுதிகள் என்று அழைக்கப்படும் பகுதியில் அடுத்தடுத்து 8 குளங்கள் உள்ளன.
இந்த குளங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த குளங்களில் உடுமலை நகராட்சி பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் ஒட்டுக்குளம் உள்ளது.
இந்த குளத்தின் மொத்த உயரம் 10அடி. மொத்த தண்ணீர் கொள்ளளவு 14.11மில்லியன் கன அடி. இந்த குளத்திற்கு பி.ஏ.பி.தண்ணீர் வருவதுடன், மழை காலங்களில் சுற்றுப்புறங்களில் உள்ள நீரோடைகள் மூலமாக தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும். மழைக்காலங்களில் இந்த குளங்களுக்கு ஒரே நேரத்தில் அதிக அளவு தண்ணீர் வந்துவிடக்கூடும் என்பதால் முழு அளவு தண்ணீர் இருப்பு வைப்பதில்லை என்று கூறப்படுகிறது.அதன்படி நேற்று காலை ஒட்டுக்குளத்தில் நீர் மட்ட உயரம் 8.70அடியாக இருந்தது. அதாவது 9.74மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. இது மொத்த தண்ணீர் கொள்ளளவில் 69.02 சதவீதமாகும்.
தங்கம்மாள் ஓடை
இதைத்தொடர்ந்து இந்த அளவிற்கு மேல் வரக்கூடிய தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. அதன் படி ஒட்டுக்குளத்தில் இருந்து உபரிநீர் உடுமலை தங்கம்மாள் ஓடை, ராஜவாய்க்கால் ஆகியவற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் இந்த ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதில் தங்கம்மாள் ஓடை உடுமலை நகராட்சி பகுதியில் 28-வது வார்டு குடியிருப்பு பகுதி வழியாக செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு தங்கம்மாள் ஓடையில் வெள்ளம் கரையைத்தொட்டபடி பெருக்கெடுத்து ஓடியது. அப்போது செடிகள், குப்பைகள் ஆகியவையும் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டதால் தங்கம்மாள் ஓடைவீதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் பாலம் பகுதிகளில் அடைப்புகள் ஏற்பட்டன. அதனால் வெள்ளம், குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள், அந்த செடிகளை அப்புறப்படுத்தினர்.
37 மி.மீ.மழை
உடுமலையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் அடித்து, மாலையில் பலத்த மழை பெய்த நிலையில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 37 மி.மீ.மழை பதிவாகியிருந்தது.