முகத்துவாரம் அடைப்பு முடசல்ஓடை வெள்ளாற்றில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

முகத்துவாரம் அடைப்பு ஏற்பட்டதால் முடசல்ஓடை வெள்ளாற்றில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-12-05 16:25 GMT
பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அடுத்த. கிள்ளை அருகே முடசல்ஓடை மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து விசைப்படகுகள், துடுப்பு படகுகள் மூலம் அங்குள்ள வெள்ளாறு முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு, திரும்பி வருவாா்கள்.
இந்தநிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையாலும், வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் முகத்துவாரம் மண்ணால் அடைபட்டது. இதனால் முடசல்ஓடை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வந்தனர். மேலும் மண்ணால் அடைபட்ட முகத்துவாரத்தை ஆழப்படுத்தி மீன்பிடிக்க செல்ல வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மீனவர்கள் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அலுவகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

முகத்துவாரம் ஆழப்படுத்தப்படும்

அதன்அடிப்படையில் மீன்வளத்துறை உதவி அலுவலர் முத்தமிழ் தலைமையிலான மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று முடசல்ஓடை மீனவ  கிராமத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் படகு மூலம் வெள்ளாற்றில் சென்று அடைபட்ட முகத்துவார பகுதி மற்றும் கடலோர பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கரைக்கு திரும்பினர். அதன்பிறகு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களிடம் கூறுகையில், படகுகள் மீன்பிடிக்க சென்று வர ஏதுவாக வெள்ளாற்றில் அடைப்பட்டுள்ள முகத்துவாரத்தை ஆழப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆய்வின்போது முடசல்ஓடை விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் நேதாஜி மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்