வாய்க்காலில் வெளியேற்றப்படும் ரசாயனத்தால் சுகாதார சீர்கேடு: ஈச்சங்காட்டில் கிராம மக்கள் சாலை மறியல்

வாய்க்காலில் வெளியேற்றப்படும் ரசாயனத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாக கூறி ஈச்சங்காட்டில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-05 16:18 GMT
கடலூர் முதுநகர்

கடலூர் முதுநகர் அருகே ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈச்சங்காட்டில் கடலூர் -சிதம்பரம் சாலையில் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரைக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ரசாயன கழிவுகள்

போராட்டம் குறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், கடலூர் முதுநகர் அருகே ஈச்சங்காடு பகுதியில் வாய்க்கால் ஒன்று உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் இந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. 

மேலும் வாய்க்காலில் அந்த பகுதியில் இயங்கி வரும் சில ரசாயன நிறுவனங்கள் தங்களது ரசாயன கழிவுகளை வெளியேற்றினார்கள். தற்போது மழை குறைந்து தண்ணீர் வடிந்ததால், ரசாயனக் கழிவுகள் வாய்க்காலில் படிந்துள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அங்கு வசிக்கும் மக்களுக்கு துர்நாற்றமும், மூச்சு திணறலும் ஏற்படுகிறது. குழந்தைகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்தனர். 

பேச்சுவார்த்தை 

கிராம மக்களின் மறியல் குறித்து தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர்.  

ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து, தாசில்தார் வந்து இதற்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தி தந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.  இதையடுத்து கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் (முதுநகர் பொறுப்பு) குருமூர்த்தி, தாசில்தார் பலராமன் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.


அதில், பொதுமக்களின் கோரிக்கை குறித்து விரைவில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 


இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்