கோவையில் தொடர்மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
கோவையில் தொடர்மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
கோவை
கோவையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அத்துடன் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.
கோவையில் கனமழை
கோவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் இருந்த பள்ளங்களிலும், மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள சுரங்கப் பாதையிலும் குளம்போல் தண்ணீர் தேங்கியது.
கோவை ரெயில் நிலைய சாலையில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் சென்றது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். உக்கடம் சலவை தொழிலாளர் குடியிருப்பில் ஒரு சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
மீண்டும் மழை
கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நொய் யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் இந்த ஆற்றில் உள்ள தடுப்பணைகள் மீண்டும் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் 2-வது நாளாக, நேற்று மீண்டும் மாலை 4 மணி அளவில் கோவை மாநகர பகுதியான காந்திபுரம், புலியகுளம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் அவி னாசி சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதில் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி வாகனங்கள் சென்றன.
போக்குவரத்து நெரிசல்
கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள லங்கா கார்னர் பகுதி யில் தண்ணீர் தேங்கியதால், ஒரு பக்கம் மட்டும் போக்கு வரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தொடர்மழை காரணமாக கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து 44½ அடியாக நீடித்து வருகிறது. அதுபோன்று பில்லூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. அத்துடன் கோவை குற்றாலம் அருவியிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டியதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.