திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த தொழிலாளர்கள் குவிந்தனர்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த தொழிலாளர்கள் குவிந்தனர்
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த தொழிலாளர்கள் குவிந்தனர்.
தடுப்பூசி
கொரோனா பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி திருப்பூர் மாநகரில் பொதுமக்களின் வசதிக்காக பஸ்நிலையம், ரெயில் நிலையம் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் தடுப்பூசி போடப்படுகிறது.
மருத்துவமனையில் குவிந்தனர்
இதேபோல் சனிக்கிழமைகளில் மாநகராட்சி சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் தடுப்பூசி போடுவதற்காக அலை மோதினார்கள்.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காலை முதலே ஏராளமானோர் ஆர்வமுடன் திரண்டனர். அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சனிக்கிழமை வரை மட்டுமே போடப்படுவதால் நேற்று ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
கொரோனா பரவும் அபாயம்
குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது. மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் உள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.